முஸ்லிம் காங்கிரஸ் ஆடும் கபட நாடகம்
- Details
- Published on Thursday, 09 August 2012 15:39
-இப்னு மஹ்மூத்-
இலங்கை தேசத்தின் ஜனநாயகம் படிப்படியாக செத்துக் கொண்டிருக்கிறது, சகலருக்கும் சம உரிமை என்கின்ற பதம் சட்டப் புத்தகங்களோடு சுருங்கிவிட்டது, இனவாத மேலாதிக்க சிந்தனை மதவாத மேலாதிக்க சிந்தனையாக பரிணமித்து அரச ஆசீர்வாதத்தோடு முஸ்லிம் மக்கள் மீது இன ஒடுக்குமுறைக்கான கரங்களை நீட்டியிருக்கிறது.
இந்த நாட்டிலே முஸ்லிம்கள் மட்டுமல்லாது அத்தனை மக்களும் ஒரு வகையான சர்வாதிகாரப் போக்கை உணர்கின்றனர். ஆயினும் தமிழ் மக்களின் போராட்டத்தை அடக்கி ஒடுக்கிய இறுமாப்புடன் ஆட்சிக் கட்டிலில் இருக்கும் ஏகாதிபத்திய சக்திகளின் நடவடிக்கைகள் ஒட்டுமொத்த நாட்டிற்கும் இன்னுமொரு சாபக் கேடாகவே தேசத்தை உண்மையாக நேசிப்பவர்களால் உணரப் படுகிறது. ஆனால்மாற்றம் ஒன்றிற்கான அறிகுறி வெகு தூரத்திலும் தென்படவில்லை.
கூடவே இருந்தவர்களுக்கும் இந்த அரசு ஆட்சிக் கட்டிலில் அமர்வதற்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கும் இந்த அரசு மிக மோசமாகவே நன்றிக்கடன் செலுத்தி வந்துள்ளதை வரலாறு சொல்கிறது, சந்திரிகா, மங்கள சமரவீர, சிறிபதி சூரியாராச்சி, ஜே வீ பீ, சரத் என் சில்வா என பலர் இந்த கசப்பான சுவையினை அனுபவித்தவர்கள் அந்த வரிசையில் முஸ்லிம் காங்கிரஸ் கூட இந்த அரசில் பலமுறை தனது விரலைச் சுட்டுக் கொண்டதுதான் ஆயினும் இந்தக் கட்சித் தலைமைத்துவத்தின் இயலாமை மற்றும் பதவி மோகம் எத்தனை அவமானங்களுக்கு பிறகும் அவர்களின் காலடியிலேயே சுருண்டு கிடக்க வைத்துள்ளது.
இனவாத கும்பல்களுடன் கூட்டு வைத்துக் கொண்டு முஸ்லிம் சமூகத்தின் மீதான அடக்கு முறைக்கான தொடக்கப் புள்ளியை இந்த அரசு பதவி ஏற்ற முதல் தடவையிலேயே பள்ளிவாயால்களில் “அதான்” சொல்வதற்கான தடையினை அமுல் படுத்துவதனுடன்தான் ஆரம்பித்தது.
இதனை தமது அரசியலில் பேசுபொருளாக்கி வாக்குகளை கபளீகரம் செய்த நமது அரசியல் தரகர்கள் அந்த அரசின் செல்லப் பிள்ளைகளாக தற்போது வலம் வருகின்றனர். அது ஒருபுறமிருக்க முஸ்லிம்களின் உரிமைக் குரல் அவர்களின் மனச்சாட்சி என்றெல்லாம் வீர வசனம் பேசித் திரியும் முஸ்லிம் காங்கிரஸ் செய்துவரும் துரோகமும் இரட்டை வேடமும்தான் மிக பாரதூரமானது.
முஸ்லிம் சமூகத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் மத ஒடுக்கு முறையானது மிகத் திட்டமிட்ட வகையில் ஒழுங்கு படுத்தப்பட்டு ஏதோ ஒரு இலக்கு நோக்கி நகர்த்தப் படுவதனை உணரக் கூடியதாக உள்ளது. இது எதிர் காலத்தில் இந்த நாட்டில் முஸ்லிம்கள் எதிர்நோக்கவுள்ள மிகப் பாரதூரமான பிரச்சினைகளுக்கான தொடக்கப் புள்ளிகளாகவே பார்க்கப்படவேண்டும். எனவே தூர நோக்குடன் மிக நிதானமாகவும் அவதானமாகவும் முஸ்லிம்கள் தமது இருப்பினை, உரிமைகளை இந்த தேசத்தில் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை ஒழுங்கமைக்க வேண்டியுள்ளது.
கடந்த வருடம் முஸ்லிம்களை குறிவைத்து கிரீஸ் மனிதன் என்கின்ற புரளி ஆரம்பித்து வைக்கப்பட்டது. பின்னர் அனுராதபுரத்தில் சியாரம் ஒன்றினை உடைத்தெறிந்து முஸ்லிம்களுக்கு எதிரான நேரடி அடக்குமுறை ஆரம்பித்து வைக்கப்பட்டு, படிப்படியாக பரவ விடப்பட்டுள்ளது. இது சிறிய பள்ளி வாயல்களில் தொடங்கி இப்போது பிரதான பள்ளிவாயல்கள் வரை முன்னேறி வருகின்றது. ஆனால் அரசு இந்த வன்முறையாளர்களுக்கு எதிராக எந்த சட்ட நடவடிக்கையையும் மேற்கொள்ளாதது மட்டுமல்லாது எல்லாவற்றிட்கும் ஒரு படி மேலாகச் சென்று இந்த வன்முறையினை முன்னின்று தொடக்கி வைத்த மதகுருவினை அவரது இடத்திற்குச் சென்று காலில் விழுந்து வணங்கி அவரது கோரிக்கைகளை துரிதமாக நிறைவேற்றுமாறு இந்த நாட்டின் அதிபரே உத்தரவிடுகிறார் என்றால் இந்த விடயங்கள் பற்றி பேசுவது றஊப் ஹக்கீம் சொல்வதுபோல் குப்பையை கிளறுவதா அல்லது சமூகத்தின் அல்லது சமுகம் தனது எதிர்காலம் பற்றி சிந்திப்பதற்காக விடுக்கப்பட்டுள்ள சமிக்ஞையா என்பதை நாம் அவதானத்துடன் உணர வேண்டும்.
கிழக்கிலே தமிழில் உரையாற்றும் போது வீர வசனம் பேசுகின்ற காங்கிரஸ் தலைமை மேற்கிலே மௌனமாக வேறு வேடம் போடுகிறது. இதனை சிஹல உறுமயவின் உறுப்பினர் “உதய காமன்பிலவே” சுட்டிக்காட்டியுள்ளார்.
கிழக்கில் தேர்தலுக்காக உரையாற்றுகின்ற வேற்பாளர் வெற்றிலைக்கு அளிக்கப் படுகின்ற வாக்கு பள்ளிகளை உடைப்பதற்காக அளிக்கப்படுகின்ற வாக்கு என பிதற்றுகின்றார் ஆனால் கிழக்கிற்கு வெளியே சப்பிரகமுவவிலும் வடமத்திய மாகாணத்திலும் இதே மு. கா. அதே வெற்றிலைச் சின்னத்தில் தான் போட்டியிடுகிறது. அங்கு வெற்றிலைச் சின்னத்திற்கு அளிக்கப்படும் வாக்கு பள்ளிகளை கட்டுவதற்கான வாக்குகளா? என பாமர சனங்களே கேட்கின்றனர். இந்த கபட நாடகம் முஸ்லிம்களை மிகவும் சிந்திக்கவே முடியாத அடிமட்ட மடையர்களாக எடை போட்டதன் விளைவா? அல்லது பொய் சொல்வதும் மக்களை எமாற்றுவதும்தான் அரசியல் சாணக்கியம் என்கின்ற புரிதலா? விளங்கவில்லை.
இத்தனைக்கு பிறகும் மு. கா. தலைமை தாங்கள் “எப்போதும் அரசுக்கு விசுவாசமாகவே தொழிற்படுவோம்” என்கிறது. இவர்கள் எப்பொழுது இவர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு விசுவாசமாக தொழிற்படப்போகின்றனர்? இந்த இரட்டைவேட நாடகம் சில வேலை அரசின் ஆசீர்வாதத்தோடு அரங்கேற்றப்பட்டுள்ள சதியோ என எண்ணத்தோன்றுகிறது. இதனை அரச சார்பு அரசியல்வாதிகளின் அறிக்கைகள் எமக்கு தெளிவாக முன்னுரைக்கின்றன.
அரசாங்கமானது இந்த கிழக்கு மாகாண சபையினை என்ன விலை கொடுத்தாவது கைப்பற்றவேண்டும் என்கின்ற நிலைப்பாட்டில் உள்ளது. ஏனெனில் கிழக்கின் தேர்தலை வென்று மாகான சபையின் காணி மற்றும் போலிஸ் அதிகாரங்களை இல்லாமல் செய்துவிட்டே வடக்கிற்கான மாகாண சபைத் தேர்தலை நடாத்தவேண்டும் என்பதுதான் அரசின் எதிர்பார்ப்பாகும். இவ்வாறான சூழலில்தான் மு. கா. கிழக்குமாகனத்தில் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து காணி விவகாரங்களை தீர்க்கப்போவதாக கதை அளக்கிறது.
தேர்தலை வென்று கொள்வதற்காக பிரதேசத்திற்கு ஒரு கதையும், ஊருக்கு ஒரு வாக்குறுதியும் என மிக தந்திரமாக முஸ்லிம்களை ஏமாற்றும் யுக்தியை மு. கா. கையாழ்வது முஸ்லிம்களின் எதிர்காலம் பற்றிய எந்தவித பிரக்ஞையும் அற்ற வெறும் கபடநாடகம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆயினும் உணர்சிக் கோசங்களால் மக்களை உசுப்பேற்றி அதிகாரங்களைக் கைப்பற்றுவதில் மிகுந்த அனுபவமுள்ள இவர்கள் சமுகத்தின் பெரும்பான்மையாக உள்ள அப்பாவி பாமர சனங்களை இலகுவாக ஏமாற்றிவிட முடியும் என தெளிவாக நம்புகின்றனர். இந்த விடயங்களை புரிந்து கொண்டுள்ள அறிவு ஜீவிகள் மக்களை விழிப்பூட்டுவது தார்மீக கடமை என்பதை உணரவேண்டும். இல்லையேல் சமூகத்தின் விடிவு தொலை தூரப்பட்டுப்போகும்.